தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அந்த கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தது
இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,81,988 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று மட்டும் 82 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,557 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மதுக்கூடங்கள், கேளிக்கை கூடங்கள் மற்றும் கூட்ட அரங்குகள் இயங்க அனுமதி இல்லை எனவும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை என அறிவித்துள்ள நிலையில், காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகளில் குளிர்சாதன வசதி இன்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மளிகை கடைகள் காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்துக் கடைகளும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இயங்கும் அழகுநிலையங்கள், சலூன்கள் செயல்பட அனுமதி இல்லை என அறிவித்துள்ள தமிழக அரசு, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், அமர்ந்து உண்ண அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது எனவும், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தமிழகம் வருபவர்கள், இ-பதிவு முறையில் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்யலாம் என அறிவித்துள்ள தமிழக அரசு,
பொதுமக்கள் பயணம் செய்யும் வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டும் பயணிக்கலாம் எனவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இருவர் மட்டுமே பயணிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ள தமிழக அரசு,
பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.







