சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி .சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 20 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 28 ரன்களிலும், கேப்டன் ரிஷப் பண்ட் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ப்ரித்விஷா 53 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 159 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில், டேவிட் வார்னர் 6 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சன் பொறுப்புடன் விளையாடி, 66 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20-வது ஓவரில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்து டிரா செய்தது.
இதனையடுத்து இந்த சீசனின் முதல் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் களம் இறங்கினர். அக்சர் பட்டேல் பந்து வீச்சில் இருவரும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனையடுத்து டெல்லி அணியில் ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பண்ட் களமிறங்கினர். ரஷீத் கான் பந்துவீச்சில் 8 ரன்கள் அடித்து டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது ப்ரித்வீஷாவிற்கு வழங்கப்பட்டது.







