மணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்… பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை…!

மணிப்பூரில் நீடிக்கும் பதற்றமான சூழல் குறித்து  பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.  பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்து…

மணிப்பூரில் நீடிக்கும் பதற்றமான சூழல் குறித்து  பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். 

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்து வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்தனர். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இதனால் மணிப்பூா் முழுவதும் ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மைதேயி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் பழங்குடியினரை அதிகம் கொண்ட காங்போபி மாவட்டத்தின் எல்லையில் உள்ள காமன்லோக் பகுதியில், குகி பழங்குடியினா் வாழும் கிராமத்தின் மீது ஆயுதம் தாங்கிய கும்பல்  துப்பாக்கிச்சூடு நடத்தியதில்  9 போ் உயிரிழந்தனா், மேலும் 10 படுகாயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மணிப்பூர் முழுவதும் கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் இணையச் சேவைகள் தடை தடை செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை  தொடா்ந்து, 11 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தளா்வு நேரம் குறைக்கப்பட்டது. இந்த கலவரத்தை தொடா்ந்து நிகழும் வன்முறைகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்கட்சிகள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்  மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் தனி நிர்வாகம் நடத்துவதை எதிர்ப்பதாகவும் மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய குழுவினரிடமிருந்து உடனடியாக அனைத்து ஆயுதங்களையும் பெற வேண்டும் என்றும் அனைத்து சமுதாய மக்களுடனும் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை போதுமானதாக இல்லை எனவும், உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுடைய கணக்குகளை விரிவாக எடுத்து அதன்படி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதம் மூலம் வலியுறுத்தினர்.

மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டி டெல்லி, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார்.  இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனை சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

மணிப்பூரில் கடந்த ஜூன் 20ம் தேதி வரை  இணைய சேவை துண்டிப்பு தொடரும் எனவும் தெரிவிக்கபட்டது. மேலும் மணிப்பூர் பழங்குடியின தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. இணைய சேவை முடக்கம் இன்னும் தளர்த்தப்படவில்லை. வருகிற ஜூன் 30ம் தேதி மாலை 3 மணி வரை இணைய சேவை முடக்கம் தொடரும் எனவும் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை  நிலைநாட்ட இந்த முடிவை எடுத்துள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 5 நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து சென்ற  பிரதமர் மோடி நாடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து மணிப்பூரில் தொடரும் பதற்றமான சூழல் குறித்து தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.