தேசியவாத காங்கிரசில் சுப்ரியா சூலே, ஃபிரபுல் படேலுக்கு புதிய பதவி!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சூலே மற்றும் பிரஃபுல் படேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத்…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சூலே மற்றும் பிரஃபுல் படேல் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே பூசல் நிலவி வருவதாக கூறப்பட்டது. அஜித்பவார் பாஜகவில் இணையவுள்ளதாகவும் வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, இந்த தகவலை அஜித்பவார் மறுத்தபோதும் கடந்த சில காலமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நிலவி வந்தது. அக்கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் அஜித்பவார் பக்கம் திரும்பியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் அரசியலில் இருந்து விலகவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் இந்த முடிவை அறிவித்தபோது கட்சித் தொண்டர்கள் அதனை ஏற்க மறுத்து அவரே தலைவராக தொடர வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

கடந்த மே 5ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பிரஃபுல் பட்டேல், சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரிக்கும் வகையில் கட்சியின் உயர்மட்ட குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என தெரிவித்தார். மேலும் சரத்பவாரே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் சரத் பவார் கட்சியின் புதிய செயல் தலைவர்களாக சுப்ரியா சூலே மற்றும் ஃபிரபுல் படேல் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.

கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் முன்னிலையில் இந்த அறிவிப்பை சரத் பவார் வெளியிட்டார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிரா மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் செய்தியாளர்களை சந்தித்தார். அஜித் பவாருக்கு கட்சியில் என்ன பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சூலே மற்றும் ஃபிரபுல் படேல் ஆகியோர் கட்சியின் செயல் தலைவராக இருப்பார்கள் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.