கோவை – திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான
ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி, 55 கிலோ
மீட்டர் நடைபயணத்தை விவசாயிகள் தொடங்கினர்.
கோவை-திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பரம்பிக்குளம்
ஆழியாறு பாசன திட்டத்தில், ஆனைமலை நல்லாறு என்ற இடத்தில் அணையை கட்டி நீர்
பற்றாக்குறையை போக்க வேண்டுமென பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை
வைத்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக திட்ட
வரைவு கொடுக்கப்பட்டு, ஆட்சி மாறியதும் மீண்டும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்தத் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றக்கோரி, இன்று பல்லடம்
அருகே அருள்புரத்தில் இருந்து “நம்ம நல்லாறு” என்ற நடைபயணத்தை, தமிழ்நாடு
விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடங்கியுள்ளனர். கோவை நாடாளுமன்ற
உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நடைபயணத்தை
கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இத் திட்டத்தை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் முழக்கங்களை எழுப்பியவாறு, அருள்புரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கினர். பல்லடம், கேத்தனூர், குடிமங்கலம் வழியாக மூன்று நாட்கள் இந்த நடைபயணத்தை மேற்கொண்டு, உடுமலைப்பேட்டையில் நடைபயணத்தை முடிக்க உள்ளனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கோவை எம்.பி. பி ஆர் நடராஜன், தமிழ்நாடு க முதல்வர் உடனடியாக கேரள அரசிடம் பேசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தும் வகையில், இந்த நடைபயணத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.
—கு. பாலமுருகன்







