மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவராக பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கடந்த 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தோப்பூரில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி எய்மஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமான பணிகள் இன்னும் முறையாக தொடங்கி நடைபெறவில்லை. இந்த கட்டுமான பணிகள் 2028ம் ஆண்டில்தான் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையில் வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக இருந்த நாகராஜன் வெங்கட்ராமனை நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
அண்மைச் செய்தி: 3 மாநில தேர்தல் – பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியீடு
கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார். இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவர் பதவி காலியானது. இந்த நிலியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக பிரசாந்த் லவானியா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பிரசாந்த் லவானியா பணியாற்றி வருகிறார்.







