புதிய விமான நிலையம் : மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வேன் – திருமாவளவன் எம்.பி.

புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வேன் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கத்தில் திருமண…

புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வேன் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கத்தில் திருமண நிகழ்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரிசர்வ் பாரஸ்ட்டில் உள்ள வனவிலங்கு சரணாலயம், தேசிய பூங்காவிற்கு பாதுகாப்பாக இருக்க ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றளவில் சூழல் உணர்வு மண்டலமாக அறிவித்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளையும் மக்களையும் அகற்றும் வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை சுட்டிக்காட்டினார். இதனால் ஆங்காங்கே போராட்டம் வெடித்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடையடைப்பு இன்று நடைபெறுகிறது என்றார்.

 

கேரளாவில் அந்த தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தை கூட்டி தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மூன்று மாதத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆங்காங்கே தற்காலிகமாக உயர்நிலைப்பள்ளி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு காத்திருப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தற்காலிக ஆசிரியர் பணியில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

 

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு விலை நிலங்களை எடுக்காமல் வீடுகளை அப்புறப்படுத்தாமல் அரசு சொந்த நிலங்களை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். அரசு நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கையை முன் வைக்கின்றனர். எனவே, விரைவில் அப்பகுதியில் ஆய்வு செய்து மக்களின் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.