விக்னேஷ் சிவனின், ரெளடி பிக்சர்ஸ் தயாரித்து, டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது நெற்றிக்கண். இதில் நயன்தாரா துர்காவாகவும், அஜமல் ஜேம்ஸ் ஆகவும், மணிகண்டன் எஸ்ஐ மணிகண்டனாகவும், ஷரன் ஷக்தி கெளதமாகவும் நடித்திருக்கிறார்கள்
படத்தின் கதை
சிபிஐ அதிகாரியான துர்கா (நயன்தாரா) ஆதரவற்றோர் இல்லத்தில் தன்னோடு சேர்ந்து வளர்ந்த ஆதித்யாவை தம்பியாக பார்த்துக்கொள்கிறார். ஒரு வாகன விபத்தில் துர்கா கண்பார்வை இழந்துவிடுகிறார். அதே விபத்தில் அவரது தம்பியும் இறந்துவிடுகிறார். இந்நிலையில், தனது வினோத பாலியல் தேவைக்காக பெண்களை சித்திரவதை செய்யும் மருத்துவர் ஜேம்ஸ் (அஜ்மல்) நயன்தாராவை கடத்த முயற்சிக்கிறார். இதில் தப்பிக்கும் நயன்தாரா வில்லனை எப்படி பழிவாங்குகிறார்? வில்லனால் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பாற்றப்பட்டார்களா? என்பது மீதிக் கதை.
நயன்தாராயிஸம் என்பதுபோல் படம் முழுக்க நயன்தாரா நிறைந்திருக்கிறார். பார்வை தெரியும்போது ஒருவகையான மேக்அப். பார்வையற்றபோது வேறு வகையான மேக்அப் என்று வெவ்வேறு கோணங்களில் நயன்தாராவின் மாறுபட்ட தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கமர்ஷியல் கதாநாயகனைப் போலவே, நயன்தாராவும் கதையை நகர்த்த அழகுற வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பை நாம் பாராட்டியாக வேண்டும். மாயா, கொலையுதிர் காலம், டோரா, இமைக்கா நொடிகளில், நயன்தாரா வெளிப்படுத்திய அதே நடிப்பின் சாயல் இதிலும் தெரிகிறது.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் மணிகண்டன் அசத்தலான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். காதலும் கடந்து போகும், காலா, சில்லுகருப்பட்டி போன்ற படங்ளில் வெவ்வேறு வகையான கதாபாத்திரத்தை மணிகண்டன் தேர்வு செய்து நடித்திருந்தார். இதுபோல இந்த படத்திலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். மேலும் நயன்தாராவுக்கு நிகரான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வெகு நாட்களாக அஜ்மலை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. இந்த படத்தில் அவர் ஒரு வழக்கமான ஆக்ரோஷமான வில்லனாக வருகிறார். அஞ்சாதே, கோ படத்தில் ஒரு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திய அஜ்மல், இந்த படத்தில் அந்த அளவிற்கு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தவில்லை. அஜ்மலை டப்பிங் பேச வைத்தது, கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. ஷரன் சக்திக்கு இந்த படம் மூலம் அதிக வாய்ப்புகள் தேடி வரலாம்.
படத்தின் சிக்கல்
இமைக்கா நொடிகள், மாயா, டோரா படங்களைப்போல இந்த படத்தின் கதையும் அமைந்துள்ளது. படத்தின் நீளம் மிகவும் அதிகம். கதைப்போக்கில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை, மிகவும் எளிதாக கண்டுபிடித்துவிட முடிகிறது. திருமணத்திற்கு முன்பே தாயான ஒரு பெண், குழந்தையை கருக்கலைப்பு செய்தால், அவள் மோசமானவள் என்றும், அவளை என்ன செய்தாலும் குற்றமில்லை என்றும் படம் சித்தரிக்கிறது. மேலும், அவர்களை அஜ்மல் துன்புறுத்துவது சரி என்ற மனநிலை உருவாக்கப்படுகிறது. அதிகமாக ரத்தம் தெறிக்கும் காட்சிகள் காட்டப்படுவது, ஒருவித சலிப்பு தன்மையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.
படத்தின் பலம்
நயன்தாரா, மணிகண்டனின் நடிப்பு. இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அட்டகாசமான பின்னணி இசையை தந்திருக்கிறார். மேலும் ஒளிப்பதிவு செய்த ராஜசேகரை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
கொஞ்சம் ஆதரவற்றோர் மீதான கரிசனம், அக்கா தம்பி பாசம், வில்லனை அழிப்பது போன்ற கமர்சியல் ஃபார்முலா என்று படத்தை வரையறுக்க முடிகிறது. நயன்தாரா தொடர்ந்து இதுபோன்ற கதைகளை தேர்வு செய்யாமல், வேறு வித்தியாசமான கதையை தேர்வு செய்ய வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. நயன்தாராவுக்காக இந்த படத்தை பார்க்கலாம்…
கட்டுரையாளர் – வாசுகி












