அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 அர்ச்சகர்களுக்கு பணி ஆணையை முதலமச்சர் முக. ஸ்டாலின் வழங்கி இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதற்கு வழிவகுக்கும் முறையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த பட்டியல் பிரிவு 5 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் 12 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் ஒருவர், பெண் ஓதுவார் ஒருவர் என 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் சமூகநீதிக்கான போராட்டத்தில் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல்லாக விளங்குகிறது. 1970 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது திமுக ஆட்சியில் இதற்கான சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பூர்வமாகவோ, ஆகம விதிகளின்படியோ அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக தடையில்லை என்று உறுதிசெய்யப்பட்ட பிறகும் வழக்குகளின் வழியாக அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆவது தொடர்ந்து தடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற நூறாவது நாளில் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது.
இந்திய நாட்டிற்கே முன்னுதாரணமாக கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையி லான இடது ஜனநாயக முன்னணி அரசு ஏற்கனவே அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்கிய வரலாற்று நிகழ்வு இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தமிழ் வழிபாட்டிற்கு வழி திறக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து கோயில்களுக்கும் விரிவுபடுத்திட வேண்டும். இதனை தொடர்ந்து அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் பெரும் பணியும் துவங்கப்பட்டிருக்கிறது. இது ஒரு நல்ல துவக்கம். தேவையான அளவு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை திறந்து பட்டயப் படிப்பு மட்டுமின்றி பட்டப்படிப்பையும் உருவாக்கி சாதி வித்தியாசம் இன்றி அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர் பணிநியமனங்கள் செய்யப்பட வேண்டும். ஒரு நெடுங்கன வை சாத்தியமாக்கிய தமிழக அரசுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவிப்பதோடு, அர்ச்சகராகும் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







