நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 68 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பொக்ரா நோக்கி இன்று காலை எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் 68 பயணிகளும் 4 ஊழியர்களும் இருந்தனர்.
பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக அந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக விமானம் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விமானத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மீட்பு பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து இந்த விபத்து காரணமாக விமானம் நிலையம் மூடப்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 72 பேரும் தீயில் கருகி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. உயிரிழந்தவர்களில் 10 பேர் வெளிநாட்டினர் என்றும், 2 பேர் குழந்தைகள் என்று விமான நிறுவனம் தெரிவித்தது. இதில் 5 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை உயிரிழந்த 68 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.








