நேபாளத்தில் 6 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மனாங் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் ஹெலிகாப்டர் இன்று காலை திடீரென மாயமானது. உள்ளூர் நேரப்படி, இன்று காலை 10.12 மணிக்கு, ஹெலிகாப்டர் ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, காணாமல் போன நேபாள ஹெலிகாப்டரில் 5 மெக்ஸிகோ பயணிகள் மற்றும் விமானியுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டரை, மூத்த விமானி சேட் பி குருங் என்பவர் இயக்கியுள்ளார். ஹெலிகாப்டரில் பயணித்த 5 பயணிகளும் வெளிநாட்டவர்கள் ஆவர்.
9NMV என்ற அழைப்பு அடையாளத்துடன் கூடிய இந்த ஹெலிகாப்டர், சொலுகும்புவில் உள்ள சுர்கியில் இருந்து, தலைநகர் காத்மாண்டுக்கு காலை 9:45 மணிக்கு புறப்பட்டதாக, நேபாளத்தின் விமான போக்குவரத்து ஆணையத்தின் தகவல் அதிகாரி ஞானேந்திர பூல் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டரில் ஐந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உலகின் மிக உயரமான சிகரத்தை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தனர். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை காத்மாண்டுவிற்கு திரும்பும் வழியில் லிக்கு என்ற இடத்திற்கு அருகில் அது மாயமாகியுள்ளது. நேபாளத்தில் பருவமழை காரணமாக, இந்த ஹெலிகாப்டரில் வழித்தடம் மாற்றப்பட்டு வேறு பாதையில் இயக்கப்பட்டுள்ள தகவலை, விமான நிலைய அதிகாரி சாகர் கேடல் தெரிவித்தார்.
தொலைவில் உள்ள சொலுகும்பு மாவட்டத்தில் உள்ள லிகுபிகே கிராமப்புற நகராட்சியின் லம்ஜுரா பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. அப்போது, ஹெலிகாப்டர் பலத்த சப்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நடந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதனையடுத்து காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காத்மாண்டுவில் இருந்து தேடுதல் மற்றும் மீட்புக்காக ஆல்டிட்யூட் ஏர் ஹெலிகாப்டர் புறப்பட்டது என்று நேபாளத்தின் விமானப் போக்குவரத்து ஆணையம் ட்வீட் செய்தது.
சிஹந்தண்டாவில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை உள்ளூர்வாசிகள் கண்டுபிடித்தனர் என்று அந்த கிராமப்புற நகராட்சி துணைத் தலைவர் நவாங் லக்பா என்பவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவரெஸ்ட் சிகரம் அருகே விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் இருந்த 5 வெளிநாட்டினரும் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது.
ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரில், ஐந்து மெக்ஸிகோ சுற்றுலா பயணிகளின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் அடிக்கடி ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துகள் நடப்பது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. கடைசியாக கடந்த ஜனவரியில் நடந்த ஒரு விமான விபத்தில், 72 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா








