சென்னை போரூரில் உள்ள உணவகம் ஒன்றில், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த சிக்கன் ஷவர்மாவுக்குள் பூச்சி இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
சென்னை, போரூரில் செயல்பட்டு வரும் “ஷவர்மா க்ரைம்” என்ற உணவகத்தில் இளைஞர் ஒருவர் சிக்கன் ஷவர்மா ஆர்டர் செய்துள்ளார். ஷவர்மாவை வழக்கம் போல் பிரித்து சாப்பிடும் போது அதில் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோன அவர், இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்டுள்ளார். அப்போது உணவக ஊழியர் வெகு இயல்பாக ஒன்று இரண்டு பூச்சி வரத்தான் செய்யும் என பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் உணவக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், அந்த நபர் பூச்சி உடன் கூடிய ஷவர்மா கொண்ட காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை டேக் செய்துள்ளார்.
இதேபோன்று, சென்னை மதுரவாயலை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீபாலவிக்னேஷ் பவன் என்ற உணவகத்தில் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையார் அதிர்ச்சியடைந்தார். மதுரவாயலை் சேர்ந்த மனோஜ் என்பவர் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இது குறித்து கேட்டபோது கடைக்காரர்கள் உரிய பதிலளிக்காததால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார்.







