விஜயவாடா உத்சவ் விழா – தெலுங்கில் பேசிய முதலமைச்சர் விஜய்!

விஜயவாடா உத்சம் 2.0 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதலமைச்சர் விஜய், முதல்வர் சந்திரபாபு நாயுடுடன் இணைந்து விழாவை கண்டுகளித்தார்.

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக விஜயவாடா சென்றார். இதற்காக சென்னை நீலாங்கரையில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திரா புறப்படார். தொடர்ந்து விஜயவாடா விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள கிருஷ்ணா நதிக் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு முதல்வர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார்.

இதன் பின்னர் முதலமைச்சர் விஜய் விஜயவாடா சென்று, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் விஜய்க்கு மலர்க்கொத்து கொடுத்து சந்திரபாபு நாயுடு வரவேற்றார். இருவரும் இரு மாநில நதிநீர் பங்கீடு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு-ஆந்திரா இடையிலான நீர் பங்கீடு, நதிகள் இணைப்பு குறித்தும் கிருஷ்ணா நீர் பங்கீடு, கோதாவரி-காவிரி இணைப்பு குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அப்போது தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து விஜயவாடாவில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் விஜய் தெலுங்கில் பேசினார். அனைவருக்கும் வணக்கம்! உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; இந்த நவராத்திரி விழாவில் பங்கேற்பது எனது அதிர்ஷ்டம்; அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.