நெல்லை அருகே தண்ணீர் நிரம்பாமல் உள்ள அதிசய கிணற்றில் சுண்ணாம்பு பாறைகளால் ஆன குகைகள் உள்ளதே காரணம் என ஐஐடி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆயன்குளத்தில் அதிசயக் கிணறு ஒன்று உள்ளது. கடந்தாண்டு பருவமழை பெய்தபோது வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் சென்றும் இந்தக் கிணறு நிரம்பாமல் இருந்தது. இதையடுத்து அதிசயக் கிணறு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள ஐஐடி பேராசிரியர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக ஐஐடி குழுவினர் அதிசய கிணறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிணறுகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஐஐடி குழுவினரின் ஆய்வில், கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகள் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுண்ணாம்பு பாறைகளுடன் ஆக்சிஜன் வேதிவினை புரிந்து துவாரங்களை உருவாக்கி அவை நாளடைவில் பெரிய குகைகளாக மாறி உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சில கிணறுகளில் கால்வாய் போன்ற அமைப்பு உருவாகி உள்ளதும், உபரி நீர் செல்ல செல்ல இந்த கால்வாய் நீரோட்டம் விரிவான கால்வாயாக மாறியதும் கண்டிபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அதிசய கிணற்றை சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ஐஐடி பேராசிரியர்கள் குழுவினர் இன்று நீர்மூழ்கி கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து பேசிய ஐஐடி பேராசிரியர்கள் குழுவைச் சேர்ந்த பொறியாளர் வெங்கட்ராமன் சீனிவாசன், கிணற்றுக்கு அடியில் உள்ள சுண்ணாம்பு பாறைகளை நிலத்தடி நீரும், மழை நீரும் கரைத்து துளைகளை பெரிதாக்கியதால் பாதாள குகைகள் உருவாகியுள்ளதாக கூறினார்.
இதனால் சுமார் 50 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் பாதைகளே உருவாகியுள்ளது என்றார். பாதாள குகைகள் வழியாக தண்ணீர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகள் நீர்மட்டம் உயர்வதாக கூறிய அவர், இதே போன்ற கிணறுகள் அருகிலுள்ள பல கிராமங்களில் உள்ளதை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகளோ குகைகளோ இருப்பது குறித்து 89 25 01 06 83 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பினால் ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கிணற்றின் நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்வதாக தெரிவித்தார். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கை செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறினர்.
– இரா.நம்பிராஜன்








