புதிய எழுச்சியுடன் சாதனை படைக்குது பாரதம் – அண்ணாமலை அறிக்கை

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 61 பதக்கங்களை குவித்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.   பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 72 நாடுகள் பங்கேற்ற…

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 61 பதக்கங்களை குவித்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 72 நாடுகள் பங்கேற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டிகளில் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெறுவது கனவாக இருந்தது. அப்படியும் ஓரிரு பதக்கங்கள் பெற்று இருந்தாலும் இந்தியா பதக்கப் பட்டியலில் இறுதியில் காணப்படும் நிலை இருந்தது.

 

ஆனால் இன்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக நாட்டின் விளையாட்டு துறை சீரமைக்கப்பட்டது. அரசியல் விளையாட்டுகளால், தலைகுனிவை தந்த, இதற்கு முன் இந்தியாவில் இடம்பெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் போல இல்லாமல், இம்முறை அரசியல் விளையாட்டும் இல்லை விளையாட்டில் அரசியலும் இல்லை.

 

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் நடைபெறும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், பிரதமர் நேர்மையாக முறையாக தகுதி அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பதிவு செய்திருக்கிறது.

மற்ற ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வறுமையில் திறமையுள்ள ஆப்பிரிக்க மக்களை அழைத்துச் சென்று தங்கள் நாட்டில் பயிற்சி தந்து, பதக்கம் வெல்வது வழக்கம். தற்போது நம் இந்தியா அது போல எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நேர்மையாக இந்தியர்கள் மூலமாகவே இந்த வெற்றியை பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால், தற்போது, நம் இந்திய நாட்டினரை அழைத்துச் சென்று, மேல் நாட்டினர் பதக்கம் வெல்லத் தொடங்கியுள்ளனர்.

 

இம்முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நம் இந்தியா அதிகம் பதக்கம் வெல்லும் துப்பாக்கி சுடுதல், அம்பு எய்தல் போன்ற போட்டிகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நாம் இத்தனை அதிகம் வெற்றிகளை குவித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. இந்தச் சாதனை இதற்கு முன்பு நிகழ்த்தப்பட்டது இல்லை. 75-வது சுதந்திர அமிர்த பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் இந்த அற்புதமான வேளையிலே இந்தியாவின் பெருமையையும் இந்தியாவின் நன்மதிப்பையும் உலக அரங்கிலே உயர்த்தி காட்டியுள்ள நமது வெற்றி வீரர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.