மறைந்த பட்டிமன்ற பேச்சாளரும், இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் உடல் இறுதி அஞ்சலியைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருப்பந்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் இலக்கியவாதி, பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர், ஆன்மீக, அரசியல் சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் நேற்று மதியம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், இலக்கியவாதிகளும் தொடர்ந்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, இன்று காலை முதலே பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், இலக்கியவாதிகளும், அவரது இறுதி நிகழ்வுக்கு நேரில் சென்றனர். குறிப்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நெல்லை கண்ணன் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சல் செலுத்தினர்.
அண்மைச் செய்தி: ‘‘இபிஎஸ் டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது’ – அறப்போர் இயக்கம்’
https://twitter.com/thirumaofficial/status/1560582057289400320
இந்த இறுதி நிகழ்வில், காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதே போன்று அதிமுக, இடதுசாரிகள், என பல்வேறு அரசியல்கட்சியினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது குடும்ப வழக்கப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கருப்பன்துறை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.








