அரும்பாக்கம் வங்கி கொள்ளை; 9 இடங்களில் இருந்து நகைகள் மீட்பு

அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களிடம் இருந்து எங்கெங்கு, எவ்வளவு நகைகள் மீட்கப்பட்டது என்பது குறித்து காவல்துறை  தெரிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு அலுவலகத்தில் இருந்து கடந்த 13ம் தேதி…

அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களிடம் இருந்து எங்கெங்கு, எவ்வளவு நகைகள் மீட்கப்பட்டது என்பது குறித்து காவல்துறை  தெரிவித்துள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு அலுவலகத்தில் இருந்து கடந்த 13ம் தேதி 15 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தமிழக காவல்துறை தனிப்படை அமைத்து பிடித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட  அனைத்து நகைகளும் மீட்கப்பட்டதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 13ம் தேதி கொள்ளை அரங்கேறிய நிலையில் 15ம் தேதி கோயம்பேடு மஃப்சல் பேருந்து நிலையத்தில் வைத்து கொள்ளையன் சந்தோஷிடம் இருந்து 15.951 கிலோ கிராம் தங்க நகைகளும், பாலாஜியிடம் இருந்து 0.063 கிராம் பிரேஸ்லெட் பறிமுதல் செய்யப்பட்டது.

17ம் தேதி ஆய்வாளர் அமல்ராஜிடம் பறிமுதல் செய்யப்பட்ட 3.590 கிலோ கிராம் நகைகள் அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. 18ம் தேதி சூரியாவிடம் இருந்து ஜெய் நகர் பார்க்கில் வைத்து 8.827 கிலோ கிராமும், செந்தில் குமரன் என்பவனிடம் இருந்து கோயம்பேடு மஃப்சல் பேருந்து நிலையத்தில் வைத்து 0.080 கிராமும், முக்கிய கொள்ளையன் முருகனிடம் இருந்து 0.373 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதே 18ம் தேதி அமல்ராஜுக்கு சொந்தமான கொள்ளையன் சந்தோஷின் உறவினர் வீட்டில் 2.656 கிலோ கிராம் தங்கமும் பின் 19ம் தேதி கொள்ளையன் வில்லிவாக்கத்தில் உள்ள பாலாஜி வீட்டில் 0.100 கிராம் தங்கமும், கோவையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின் மருமகன் ஸ்ரீவத்சவாவிடம் இருந்து 0.063 கிராம் நகைகளும் என மொத்தம் 31.700 கிலோ கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.