நெல்லை: சாதி மறுப்பு திருமணம் – மார்க்சிஸ்ட் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய 13 பேர் கைது!

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவத்தில், பெண்ணின் தாய், தந்தை உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டம்…

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவத்தில், பெண்ணின் தாய், தந்தை உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் உள்ளது.  இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு,  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண்,  வேறு சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி இருவரும் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து இந்த காதல் ஜோடிக்கு நேற்று முன்தினம் (ஜூன் 13) கட்சி அலுவலக வளாகத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் திருமணம் செய்து வைத்தனர்.  இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் 10-க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் பெண்ணை அழைத்துச் செல்ல கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.  அப்பொழுது திருமணமான பெண் அவர்களுடன் செல்ல மறுத்ததால் கட்சி நிர்வாகிகளுடன் பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண் வீட்டாருக்கும்,  கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இதனையடுத்து கட்சியின் அலுவலகம்,  கண்ணாடி,  இருக்கைகள், கதவு என அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.  இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் பெண்ணின் தாய் சரஸ்வதி,  தந்தை முருகவேல்,  வெள்ளாளர் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.