நெல்லை: போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

களக்காடு அருகே விளையாட்டாக அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 4 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திரா காலனியைச் சேர்ந்தவர்கள் பாலன் மகன் சந்துரு (12), மாரியப்பன் மகன் நந்த பெருமாள் (12) கீழப்பத்தையை சேர்ந்தவர்கள் மாரியப்பன் மகன் நரேஷ் (12), ஜீவா மகன் வெற்றி மதன் (12). இவர்கள் நான்கு பேரும் கீழ பத்தையில் உள்ள ஒரு பள்ளியில் 7ம்
வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்ததுள்ளது. அப்போது சத்து குறைபாடு உள்ள மாணவர்களுக்கு மருத்துவ குழுவினர் சத்து மாத்திரைகள் வழங்கியுள்ளனர். அப்போது சந்துரு, நந்த பெருமாள், நரேஷ், வெற்றி மதன் ஆகியோர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து இடைவேளையின் போது நான்கு மாணவர்களும் யார் அதிக சத்து மாத்திரையை சாப்பிடுவது என்று விளையாட்டாக போட்டி போட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் சந்துரு 15 மாத்திரைகளும், நந்த பெருமாள் ஏழு மாத்திரைகளும், நரேஷ் 3 மாத்திரைகளும், வெற்றி மதன் நான்கு மாத்திரைகளும் உட்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள் நான்கு பேருக்கும் திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடும் வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் நான்கு பேரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கிருந்து சந்துரு, நந்த பெருமாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நரேஷ், வெற்றி மதன் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து களக்காடு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டாக அதிக சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்ட சம்பவம் களக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.