விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகளின் போராட்டம், டெல்லியில் 41வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி விக்யான் பவன் அரங்கில் விவசாய சங்கங்கள் – மத்திய அரசு இடையே நேற்று நடந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து 4 மணி நேரத்திற்க்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால், விவசாய சங்க தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையேயான, 8-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மூன்று சட்டங்களையும் ரத்து செய்வதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பிடிவாதமாக இருந்ததால் உடன்பாடு ஏற்படவில்லை எனவும், அடுத்த கட்ட பேச்சு வார்த்தையின் போது தீர்வு காணப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.







