பேச்சுவார்த்தை இழுபறி – தெலங்கானாவில் 119 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறார் ஒய்.எஸ்.சர்மிளா..!

காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால தெலங்கானாவில் 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.தெலங்கான கட்சி தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார். தெலங்கானா,  மத்தியப் பிரதேசம்,  ராஜஸ்தான்,  சத்தீஸ்கர்,  மிசோரம் ஆகிய 5…

காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால தெலங்கானாவில் 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.தெலங்கான கட்சி தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா,  மத்தியப் பிரதேசம்,  ராஜஸ்தான்,  சத்தீஸ்கர்,  மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவு பெற உள்ளது.  எனவே இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக 5 மாநிலங்களுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார்.

  • சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
  • தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்.

தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சியிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆந்திராவின் முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா  ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் ஒய்.எஸ்.சர்மிளா தொடர்ச்சியாக பி.ஆர்.எஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் அடிப்படையில் ஆளும் கட்சியான பிஆர்எஸ் கட்சியின் சந்திர சேகர ராவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியுடன் இணைய பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் காங்கிரஸிடமிருந்து கூட்டணி குறித்து முறையான அழைப்பு வராத நிலையில் தனித்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தெலங்கானாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..

“ தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருக்க காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செல்ல விரும்பினோம்.  ஏனெனில் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்தால் அது இறுதியில் முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்குத்தான் பலன் தரும்.  ஆனால் அது நடக்கவில்லை.  அதனால் தற்போது தனித்து களம் காண்கிறோம். இதனால எங்கள் மீது எந்த  தவறும் இல்லை.

எனவே ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி மொத்தமுள்ள  119 தொகுதிகளிலும் போட்டியிடும்.  நான் பாலேரு தொகுதியில் போட்டியிட உள்ளேன்.  கட்சியினர் என்னை மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கோரிக்கைகள் வைத்துள்ளனர்.  ” என ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.