நீட் விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் தேதி தொடர்பாக விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்த்திருந்தார்.
இந்நிலையில், வரும் 8ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்கு மீண்டும் அனுப்ப அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.







