பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய பாதுகாப்பு வீரர்கள் உள்ளதாக நம்புவதாகவும், ஆனால் அந்த தகவலை பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் சிறைகளில் இந்திய பாதுகாப்புடை வீரர்கள் அதிக அளவில் அடைக்கப்பட்டு உள்ளனரா? அவர்களை மீட்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், காணாமல் போன இந்திய பாதுகாப்பு படை வீரர்களை திருப்பி அனுப்புவது அல்லது விடுதலை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை ஜனவரி 1ம் தேதி இந்திய தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து கிடைத்த தகவல்களின்படி 83 இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுவதாகவும், ஆனால் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர் என்பதை அந்தநாட்டு அரசு ஒப்புக்கொள்ள மறுக்கிறது என்றும் மத்திய அரசு விளக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
அதேபோல இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் இந்திய அரசு ராஜதந்திர வழிகள் மூலமாக அவர்களை விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் அரசிடம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2014ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பிடியிலிருந்த 2,193 இந்திய மீனவர்கள் மத்திய அரசால் மீட்கப் பட்டிருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளது.