நீட் தேர்வு: மாணவர்கள் சோர்வடையக் கூடாது – தமிழிசை செளந்தரராஜன்

நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் மனம் சோர்வு அடையாமல் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் எம்பிபிஎஸ்,…

நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் மனம் சோர்வு அடையாமல் முயற்சி
செய்து வெற்றி பெற வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை
செளந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. அதன்படி, நிகழாண்டு நீட் தோ்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தோ்வை 17.78 லட்சம் மாணவா்கள் எழுதினா். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்றனா். விடைக்குறிப்பு, தோ்வா்களின் ஓஎம்ஆா் விடைத்தாள் நகல்கள் ஆக. 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன. நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் மனம் சோர்வு அடையாமல் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரியில் இருந்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய 5,749 மாணவர்களில் 2,899 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 675 மதிப்பெண்கள் பெற்று
புதுச்சேரி மாநில அளவில் முதல் இடத்தையும், தேசிய அளவில் 1,249 இடத்தையும் பெற்றுள்ள மாணவர் குருதேவநாதனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களும், அதிக மதிப்பெண்கள் பெற இயலாத மாணவர்களும் மனம் சோர்வு அடையாமல் முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.