கர்நாடக மாநிலம், பெங்களூரில் பெய்த கனமழையால் அந்நகர் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபடுவதில் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 4-ம் தேதி வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது.
இதனால் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக ஏரிகள் உடைந்து வெளியேறிய நீர் முழுவதும் ஐடி நிறுவனங்கள், சொகுசு பங்களாக்கள் என பல பகுதிகளில் சூழ்ந்தது.
இதனால் கடந்த 3 தினங்களாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக
பாதிக்கப்பட்டது. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளை விட்டு படகுகள், பரிசல்
மற்றும் டிராக்டர் மூலமாக மக்கள் வெளியேறினர். இந்த நிலையில், பெங்களூர் நகரம்
வெள்ளத்தில் தத்தளிக்க முக்கிய காரணமாக அதிகபட்சமான ஆக்கிரமிப்புகள் தான் என
கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி பெங்களூர் நகரில் உள்ள 175 ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுக்கள் தற்பொழுது மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி
வருகின்றனர். மேலும் மழை நீர் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டிருந்த திவ்யஸ்ரீ
சொகுசு குடியிருப்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று
வருகிறது.
மற்றொருபுறம் சர்ஜாபுரா ரோடு, எமலுர், ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி உள்ளிட்ட
பகுதிகளில் மின் மோட்டார்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தேங்கிய மழை
நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு பிறகு
மழை நீர் வடிந்து வருவதால் பெங்களூர் நகரம் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி
வருகிறது.









