டெல்லியில் கடந்த மாதம் நடந்த நீட் முறைகேடு தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரி தொடர்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா டெல்லி போலீசாரால் தொடரப்பட்ட 13 முதல் தகவல் அறிக்கைகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதேபோன்று மகாராட்டிரா, பிகார், மேற்கு வங்கம், அசாம் மாநில அரசுகளும் வழக்குகளை தாக்கல் செய்துள்ளது என்று தெரிவித்தார். அதனை ஏற்று உச்சநீதிமன்றம் அரசியல் சாசனப் பிரிவு 142 ஆம் பிரிவின் படி வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்ததை தொடர்ந்து செப்டம்பர் 5 ஆம் தேதி போராட்டத்தை கைவிடுவதாக கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகி சவுரவ் தாஸ் நீதிமன்றத்தில் அறிவித்தார். நீதிமன்ற உத்தரவை ஒன்றிய அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர், அரசியல் சாசனத்தின் 142 வது சிறப்பு பிரிவை பயன்படுத்தி டெல்லி பொலிஸார் தொடர்ந்த 13 வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அதே போன்று மகாராஷ்டிரா, பிகார் அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் மற்ற மாநிலங்களில் வழக்கு தொடர்பிடிருந்தால் அதனையும் ரத்து செய்வதாக அறிவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், 2026 நீட் தேர்வு ரத்து காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று மாதத்தில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.




