கோவை ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணிக்கு எதிரான ஆட்டத்தில், கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை மண்டலத்தில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில், ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணியுடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி மோதியது.
இதையும் படியுங்கள் : ’தாஹி’ வேண்டாம்…. ’தயிர்’ போதும்…. – மத்திய அரசு அறிவிப்பு
இதில் டாஸ் வென்ற ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் வீரர்கள் சச்சின் 49 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசி 91 ரன்களும், விஜய் அபிமன்யு 56 பந்துகளில், 10 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 67 ரன்களும் குவித்தனர்.
இந்த இணை அணிக்காக 88 பந்துகளில் 152 ரன்கள் சேர்த்தது. NCL கிரிக்கெட் தொடர் வரலாற்றில், இதுவே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
இதையடுத்து, 181 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கோவை ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி பவர் ப்ளே ஓவர்களில் நல்ல துவக்கத்தை கொடுத்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக 19.4 ஒவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியது.
91 ரன்கள் விளாசி ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணிக்கு வலுசேர்த்த அக்கல்லூரியின் மாணவர் சச்சின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.








