நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் நடத்தும் மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில் KLN பொறியியல் கல்லூரி அணி 157 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிவகங்கை KLN பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நியூஸ் 7 தமிழ் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், KLN பொறியியல் கல்லூரி அணியும், மதுரை சியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின. டாஸ் வென்ற KLN பொறியியல் கல்லூரி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ஜனார்த்தன் 16 ரன்களிலும், அஜய் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வேல் முருகன், ஹபிஸ் ஜோடி மதுரை சியா கல்லூரி அணியினரில் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் KLN கல்லூரி அணியின் ரன்கள் விறு விறுவென உயர்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை குவித்து. அதிகபட்சமாக வேல் முருகன் 94 ரன்களும், ஹபிஸ் 43 ரன்களும் எடுத்தனர்.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சியா கல்லூரி அணி, KLN கல்லூரி அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் மதுரை சியா கல்லூரி அணி 15 ஓவரில் 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. மதுரை சியா கல்லூரி தரப்பில் இருள் பாண்டி அதிகபட்சமாக 11 ரன்களை எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்ணில் ஆட்டமிழந்தனர். KLN கல்லூரி அணி தரப்பில் ஜனார்த்தன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த போட்டியில் 46 பந்துகளுக்கு 94 ரன்கள் மற்றும் பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய KLN பொறியியல் கல்லூரி வீரர் வேல்முருகன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- பி.ஜேம்ஸ் லிசா








