கற்பகம் கல்விக் குழுமத்தை கடைசி ஓவரில் வீழ்த்தி, 11 ரன்கள் வித்தியாசத்தில் பண்ணாரி அம்மன் கல்லூரி திரில் வெற்றி பெற்றது.
நியூஸ்7 தமிழ் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை கற்பகம் கல்விக் குழுமம் மற்றும் பண்ணாரி அம்மன் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பண்ணாரி அம்மன் கல்லூரி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 193 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர் வேத் பிரகாஷ் 53 பந்துகளில் சதம் விளாசி, NCL2023 தொடரில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒட்டுமொத்தமாக வேத் பிரகாஷ் 62 பந்துகளில் 17 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனவே பண்ணாரி அம்மன் கல்லூரி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 193 ரன்கள் குவித்து, கற்பகம் பல்கலைக்கழகம் அணிக்கு 194 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதனை தொடர்ந்து இரண்டாவது பேட்டிங் செய்த கற்பகம் கல்விக் குழுமம் அணி பவர் பிளே ஓவர்களில் 80 ரன்களுக்கும் மேல் விளாசி வலுவான நிலையில் தொடர்ந்தது. அந்த அணியின் கேப்டன் ரோஷன் சிபி 17 பந்துகளில், 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசி 43 ரன்கள் எடுத்து, பண்ணாரி வீரர் விஷ்ணு வரதன் பந்தில் போல்ட் ஆனார்.
அதன் தொடர்ச்சியாக தொடர் ரன் குவிப்பில் ஈடுபட்ட கற்பகம் கல்லூரி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. இருப்பினும் கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி விக்கெட் மட்டுமே கையில் வைத்து விளையாடிய கற்பகம் கல்லூரி, கடைசி விக்கெட்டையும் இழந்தது.
இதனால் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி திரில் வெற்றி பெற்று அசத்தியது. சிறப்பாக பந்து வீசிய பண்ணாரி அம்மன் கல்லூரி வீரர் எஸ் என் சஞ்சய் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்த தொடர் வெற்றியின் மூலம் பண்ணாரி அம்மன் கல்லூரி கோவை மண்டலம் குரூப் B புள்ளிப் பட்டியலில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து முதல் இடத்தில் உள்ளது.
பண்ணாரி அம்மன் கல்லூரி கேப்டன் வேத் பிரகாஷ் 53 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது சங்கரா கல்லூரியின் உடற்கல்வி பேராசிரியர் நெல்சன் மற்றும் நியூஸ் 7 தமிழ் முதன்மை செய்தியாளர் மற்றும் கோவை மண்டல தலைமை செய்தியாளர் பிரசாந்த் ஆகியோர் வழங்கினர்.
இவர், NCL 2023 டி20 கிரிக்கெட் தொடரில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கோவை கற்பகம் பல்கலைக்கழகம் அணியுடனான போட்டியில் சதம் விளாசி அசத்தினார் வேத் பிரகாஷ். அதுமட்டுமின்றி NCL2023 கிரிக்கெட் தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் வேத் பிரகாஷ்.