கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே சூடு பிடித்த அம்மாநில தேர்தல் களம் குறித்து இப்போது பார்க்கலாம்.
கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் மொத்த 224 இடங்கள் உள்ளன. இதில், 113 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க கூடிய தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104, காங்கிரஸ் 80, மதச் சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் பாஜக ஆட்சியமைத்தது. ஆனால், பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் ஓரு வாரத்தில் ஆட்சி அரியணையில் இருந்து இறங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சரானார். ஓராண்டு மட்டுமே அவரின் ஆட்சி இருந்தது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவிற்கு மாறியதால், ஆட்சி மாறியது. தொடர்ந்து பாஜகவின் எடியூரப்பா முதலமைச்சரனார். உட்கட்சி முடிவால், 2021ம் ஆண்டு பசவராஜ் பொம்மை முதலமைச்சரானார்.
இந்த பின்னணியில் தான் தற்போது கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வேண்டும் என்று ஆளும் பாஜக, ஆண்ட காங்கிரஸூம் வியூகம் வகுத்து வருகின்றன. அதிக இடங்களை வென்று, ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக வர வேண்டும், மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் நினைக்கிறது.
டெல்லியைத் தொடர்ந்து பிற மாநிலத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வரும் ஆம் ஆத்மி இங்கும் களமிறங்குகிறது. இவை தவிர, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் ‘கல்யாண ராஜ்ய பிரகாதி பக்ஷா என்கிற கே.பி.பி.ஆர்’ கட்சி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும், மாநிலக் கட்சிகள் சிலவும் களத்தில் இருந்தாலும் தற்போது வரை 4 முனைப்போட்டி பிரதானமாக இருக்கிறது.
முன்பே களமிறங்கிய கட்சிகள்
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டன. காங்கிரஸ் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. ஆம் ஆத்மி 90 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 90க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ஆளும் பாஜக தற்போது வரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. ஆனால், கட்சிகள் தங்களின் வெற்றிக்கான வியூகத்தை வகுத்து செயல்படுத்த தொடங்கி விட்டன.
பிரம்மாண்ட ராமர் கோயில்
உத்திரப்பிரதேசம் போல் தொடர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று அம்மாநில பாணியை இங்கும் பின்பற்றத் தொடங்கியுள்ளது பாஜக. குறிப்பாக, ராமநகர் மாவட்டம் ராமதேவரா மலையில் 19 ஏக்கர் பரப்பளவில் 120 கோடி ரூபாயில் பிரமாண்ட ராமர் கோயில் கட்ட முடிவு செய்து, முதல்கட்டமாக பட்ஜெட்டில் ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை லிங்காயத், ஒக்கலிகர் சமூகத்தினருக்கு அளிப்பது. எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான உள்இடஒதுக்கீட்டை உயர்த்துவது உள்ளிட்ட முடிவுகள் சர்ச்சையாகியுள்ளன. ஒரு சமூகத்தினர் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்தியது உள்ளிட்ட எதிர்ப்பலைகளையும் பார்க்க முடிகிறது.
காங்கிரஸ் வாக்குறுதி
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் உதவித் தொகை, குடும்பத் தலைவிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம், உள்ளிட்ட திட்டங்களையும் மாவட்ட வாரியாக தேர்தல் வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. ஏற்கனவே ஆட்சியில் இருந்துள்ள அனுபவத்தில் மக்களைக் கவரும் திட்டங்களை மதச்சார்பற்ற ஜனதா தளமும் சொல்லி வருகிறது. காங்கிரஸ் அகில இந்திய தலைவராக உள்ள மல்லிகார்ஜூன கார்கே தொடங்கி தேசிய தலைவர்கள் பலரும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரின் பிரச்சாரம் என பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இது தவிர பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் புதிய கட்சி 50க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடுகிறது. இது பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சுயேச்சைகள் சிலரும் சில தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு சட்டப்பேரவை அமையும். ஆளுங்கட்சி அதிருப்தி அலை, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைக் கொடுக்கும். இதையெல்லாம் மீறி பாஜக அதிக இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.தங்களின் தேர்தல் வாக்குறுதிகள், தலைவர்களின் பிரச்சாரங்கள் மட்டுமின்றி, வியூகம் வகுக்கும் நிறுவனங்களையும் கட்சிகள் நாடியுள்ளன. குறிப்பாக, பாஜ.கவினர் ‘வராஹி’ என்கிற நிறுவனத்தையும், காங்கிரஸ் கட்சி ‘மைண்ட் ஷேர்’ என்ற நிறுவனத்தையும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் குறிப்பிட்ட சில நிறுவனங்களை என தேர்தல் வியூகத்திற்காக நியமித்துள்ளன. இது மட்டுமின்றி தனி நபர்களுக்கும் 50க்கும் மேற்பட்ட தேர்தல் வியூக வகுப்பு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன என்கிறார்கள்.
கட்சிகளின் வாக்குறுதிகள்… தலைவர்களின் பிரச்சாரம், மக்களின் நம்பிக்கை,
வியூக வகுப்பாளர்களின் வழிகாட்டல்… எது? யாருக்கு ? வெற்றியைத் தரப்போகிறது? சிறப்பு பெற்ற மைசூர் பட்டு தலைப்பாகையை சூடப் போவது யார்? மே 13ம் தேதி வரை காத்திருப்போம்….
இது குறித்து சொல் தெரிந்து சொல் பகுதியில் வெளியான காணொளியைக் காண…