அவதார் 2 வெளியாவதில் சிக்கல் – காரணம் என்ன?

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் அவதார் 2, தமிழ்நாட்டில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்படம் குறித்தும், சிக்கலுக்கான காரணம் குறித்தும் விரிவாகக் காணலாம். பன்னெடுங்காலமாகவே சினிமாவும் சர்ச்சைகளும் ஒன்றோடு ஒன்று கை…

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் அவதார் 2, தமிழ்நாட்டில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்படம் குறித்தும், சிக்கலுக்கான காரணம் குறித்தும் விரிவாகக் காணலாம்.

பன்னெடுங்காலமாகவே சினிமாவும் சர்ச்சைகளும் ஒன்றோடு ஒன்று கை கோர்த்து தான் பயணிக்கிறது. தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் எதுவுமே சர்ச்சையை சந்திக்காமல் வெளிவரவில்லை. அந்தவரிசையில், உலக புகழ்பெற்ற ஹாலிவுட் படமான அவதார் – 2‘ம் இணைந்துள்ளது. பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் இப்படம் தொடர் சர்ச்சைகளிலும் சிக்கிவருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரத்து 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி 2009’ல் வெளியான இப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டையாடியது. வசூலில் இன்றளவும் உலகின் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்திருக்கும் இப்படம், motion capturing தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை தொட்டது. 3டி தொழில்நுட்பத்திலும் இப்படம் வரலாற்றில் புதிய புரட்சியை உருவாக்கி பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு, அடுத்த பாகத்திற்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு உயர்த்தியது. முதல் பாகத்தின்போது இப்படத்தின் அடுத்த பாகத்திற்கான கதையை இயக்குநர் ஜேம்ஸ் கேமெரூன் தயார் செய்துவிட்டிருந்த போதிலும் 13 ஆண்டுகள் கழித்து, வரும் 16-ம் தேதிதான் வெளியாகிறது.

இந்த கால தாமதத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. குறிப்பாக, இரண்டாம் பாகம் பண்டோரா உலகின் தண்ணீர் தேசத்தை மையப்படுத்தி காட்சிபடுத்தப்பட்டுள்ளதால், இதற்காக UNDERWATER MOTION CAPTURE தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 3டி, 4K மற்றும் 48 FRAMES PER SECOND என்ற மூன்று தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கி, சினிமா உலகில் அடுத்த புரட்சியை ஏற்படுத்த தயாராக இருக்கிறது அவதார் 2. இந்த சூழலில் கொரோனா பேரிடரினாலும், படத்திற்கான தாமதம் அதிகரித்தது.

படத்தின் இயக்குநர் கேமெரூன், ஒரு தலைசிறந்த perfectionism என்றுதான் சொல்ல வேண்டும். கடல் நீருக்குள் பயணம் செய்வதையே தன்னுடைய ஓய்வுநேர hobby-யாக மேற்கொள்ளும் அவர், ஆழ்கடலில் நிகழும் காட்சிகளின் நம்பகத்தன்மைக்காகவும் perfectionகாகவுமே பல்வேறு மெனக்கெடல்களையும் சவால்களையும் மேற்கொண்டார். தண்ணீருக்குள் நடைபெறும் காட்சிகளை, cg-ஐ கொண்டு உருவாக்கும் முயற்சியில் தன்னிறைவு அடையாத கேமெரூன், அந்த காட்சிகள் அனைத்தையும் நீருக்குள்ளேயே படம் பிடிக்கும் முடிவுக்கு வந்தார். குறைந்தது ஒரு நிமிடமாவது நீருக்குள் மூச்சிப்பிடித்தால் மட்டுமே இது சாத்தியப்படும் நிலையில், இதற்காகவே நடிகர்களுக்கு ஆண்டாண்டுகளாக பயிற்சிகளும் வழங்கப்பட்டன. டைட்டானிக் ரோஸ் கதாபாத்திரத்தில் நம் மனம் கவர்ந்த கேத் வின்ஸ்லெட், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர், தொடர்ந்து 4:30 நிமிடங்களுக்கு மேல் நீருக்குள் மூச்சுப்பிடிக்கும் அளவிற்கு பயிற்சி பெற்று, படத்தில் நடித்துள்ளார்.

சினிமா வரலாற்றிலேயே இதுவரை அதிக வசூல் செய்த படங்களின் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தால் மட்டுமே அவதார் -2 அனைத்து தரப்பினருக்கும் லாபகரமான படமாக இருக்கும். இதனாலேயே உலகளவில் இப்படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தமிழில் டப் செய்து வெளியிடப்படும் இப்படத்திற்கான டிக்கெட் விலை, இங்கும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

படத்தின் வசூலில் 60% வழங்க வேண்டும் என்று விநியோகஸ்தார்கள் நிபந்தனை விதித்ததாக கூறப்படும் நிலையில், அதனை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்க மறுப்பதாக தெரிகிறது. இதனால் தமிழ்நாட்டில் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே காரணத்தினால்தான், கேரளாவிலும் அவதார்-2 படத்தை வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சிக்கல்களும் குழப்பங்களும் நீடித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவதார்-2 படம் வெளியாவதற்கு முன்பாகவே தென்இந்தியாவில் மட்டும் இதுவரை சுமார் 150 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து தயாரகவுள்ள அவதார் 3 மற்றும் 4ம் பாகத்திற்கான பணிகளை தொடங்க முடியும் என தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் கேமெரூன். அப்படி நடக்காத பட்சத்தில் அடுத்த இரண்டு பாகத்தையும் ஒன்றாக சேர்த்து, கடைசியாக 3ம் பாகத்தின் மூலமாக அவதார் தொடரை முடித்துக்கொள்ளப்போவதாகவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். பல தடைகள் இருந்தாலும் அவற்றை தகர்த்தெறிந்து அவதார் -2 படம் வசூல் சாதனை படைக்க வேண்டும் என்பதே, உலகம் முழுவதும் உள்ள அவதார் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.