தேசிய அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஜூடோ போட்டியில் தமிழ்நாட்டு மாணவர்கள் முதல் முறையாக தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு மூலம் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஜூடோ போட்டி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது. இதில் சென்னை புரசைவாக்கம் அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தர்சன் பிரியன் 30 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், அதே பள்ளியில் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் அஸ்வின் மற்றும் கொடுங்கையூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சௌமியா வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.
14 வயது கீழ் உள்ள மாணவர்களுக்கான ஜூடோ போட்டியில் 3 பதக்கங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளன. அதிலும் குறிப்பாக முதல் முறையாக ஜூடோ போட்டியில் தமிழகத்திற்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.







