உலக வரைபடத்தில் ஐந்தாவதாக புதிய பெருங்கடல் ஒன்று இடம்பிடித்துள்ளது.
சர்வதேச அளவில் புவியியல் மற்றும் கடல் சார்ந்த செய்திகளையும், மாற்றங்களையும், நாடுகளுக்கு புதிய பெயர் வைக்கப்படுவதையும் வரைபடங்களில் (Map) நேஷல் ஜியாக்ரஃபிக் (National Geographic) நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. நேஷல் ஜியாக்ரஃபிக் என்பது அமெரிக்காவை மையமாகக் கொண்ட தொலைக்காட்சி மற்றும் புவியியல் சார்ந்த செய்தி நிறுவனம் ஆகும். அதிகாரப்பூர்வமான உலக வரைபடங்களையும் (World Map) இந்த நிறுவனமே வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த நிறுவனம் தற்போது தென் பெருங்கடல் (Southern Ocean) என்னும் கடல் இருப்பதாகவும், அதனை வரைபடத்தில் சேர்த்தும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது உலக கடல் தினமான ஜூன் 8ம் தேதி வெளியிடப்பட்டது.
7 கண்டங்கள் மற்றும் 4 கடல்கள்:
உலக அளவில் பள்ளிச் சிறுவர்களுக்கு, ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிக்கா ஆகிய ஏழு கண்டங்களும், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் ஆகிய நான்கு பெருங்கடல்களும் இருப்பதாக புவியியல் பாடத்தில் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, தென் பெருங்கடல் என்னும் புதிய கடலும் இருப்பதாகக் கூறி அதனை பூகோள வரைபடத்தில் அங்கீகரித்துள்ளது நேஷனல் ஜாக்ரஃபிக் நிறுவனம்.
தென் பெருங்கடல் எங்கு உள்ளது?
தென் பெருங்கடலானது அண்டார்டிக்கா கண்டத்தில் இருப்பதாக நேஷனல் ஜாக்ரஃபிக் நிறுவனம் அறிவித்துள்ளது. தென் பெருங்கடல் இருப்பதை அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்திருந்தாலும், கடற்சார் ஆராய்ச்சியாளர்களும், புவியியல் வல்லுநர்களும், தென் பெருங்கடல் என்ற ஒரு பகுதி இருப்பதாகக் பல ஆண்டுகளாகவே கூறிவந்துள்ளனர். ஆனாலும் சில புவியியல் வல்லுநர்கள் தென் பெருங்கடல் இருப்பதை ஏற்றுக்கொள்ளாததால் அவர்களுக்கு இடையே குழப்பங்கள் நிலவி வந்தன. ஆனால் நேஷனல் ஜாக்ரஃபிக் நிறுவனம் தென் பெருங்கடல் இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால், இதுவரை நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்பகுதியின் தெற்கே 60 டிகிரி அட்ச ரேகையில் தென் பெருங்கடல் அமைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் காலநிலை மாற்றத்தால் இதனுடைய எல்லையை வரையறுப்பதில் சிக்கல் எழலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தென் பெருங்கடல் என்ற ஒன்று இப்பொழுதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டாலும், தென் பெருங்கடல் என்ற பெயரை ஏற்கெனவே சிலர் பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு தெற்கே உள்ள கடற்பகுதி முழுவதையும் தென் பெருங்கடல் என்றே ஆஸ்திரேலியா அழைத்து வருகிறது.

தென் பெருங்கடலுக்குச் செல்வது சாத்தியமா?
தென் பெருங்கடலை ஆய்வு செய்வதற்காகவே மிதக்கும் ஆராய்ச்சி கூடத்தை உருவாக்கி வருவதாக பிரான்சை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஜீன் லூயிஸ் எட்டினே என்பவர் சமீபத்தில் அறிவித்துள்ளார். மேலும் அதற்கு போலார் பாட் (Polar Pod) என பெயரிட்டுள்ளார். ஆனால் இந்த மிதக்கும் ஆராய்ச்சி கூடத்தில் மோட்டார் பொருத்தப்படவில்லை என்றும், நீரில் தானாக மிதக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் இந்த மிதக்கும் ஆராய்ச்சி கூடம் முழுமையாக 2024ம் ஆண்டே முழுமையாகத் தயாராகும் என்று ஜீன் லூயிஸ் எட்டினே தெரிவித்துள்ளார்.

தென் பெருங்கடலை ஆய்வு செய்ய பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், நீரில் மிதக்கும் 200 ரோபோக்களை அனுப்பி வைத்துள்ளது. இவை தென் பெருங்கடலின் உப்புத்தன்மை, கார்பன் அளவு, ஆக்ஸிஜன் அளவு, குளோரோஃபில் அளவு மற்றும் சுற்றுப்புறச் சூழல் குறித்து ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தென் பெருங்கடலுக்குச் செல்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கப்பலில் பயணம் செய்து தென் பெருங்கடலுக்குச் செல்லலாம் என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தென் கடல்பகுதியில் வழக்கத்திற்கு மாறாகச் சிறிய அலைகளின் வீச்சு அதிகமாக இருப்பதால் அங்குச் செல்பவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.







