“நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்” – ஓபிஎஸ் பேட்டி

பாஜக அதிக பெரும்பான்மையை பெறும் என்றும், நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல்…

பாஜக அதிக பெரும்பான்மையை பெறும் என்றும், நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 -ம் தேதி வரை 7 கட்டங்களாக வெவ்வேறு நாட்களில் நடந்து முடிந்தது. நேற்று (ஜூன் 1) மாலை 6 மணியுடன் இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து, பல்வேறு செய்தி ஊடகங்கள்/நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வரும் ஜுன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாவதை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
“மக்களவை தேர்தலில் பாஜக அதிக பெரும்பான்மையை பெற்று, மீண்டும் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்.  மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது ஐந்து தலைமுறையாக வேலை பார்த்து வருகிற தோட்டத் தொழிலாளர்களின் விருப்பம். அதைத்தான் நான் அறிக்கை வாயிலாக குறிப்பிட்டுள்ளேன். அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பார்த்து அடுத்த நடவடிக்கை குறித்து தெரிவிக்கிறேன்”
இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.