மாநில அந்தஸ்து விவகாரம் – என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மக்களை ஏமாற்றுவதாக நாராயணசாமி குற்றச்சாட்டு

மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மக்களை ஏமாற்றுவதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரியில் நேற்று…

மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மக்களை ஏமாற்றுவதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரியில் நேற்று நடந்த நீதிமன்ற விழாவில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க நீதிபதிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியது வேடிக்கையாக உள்ளது. நீதிபதிகள் தீர்ப்புதான் கூறுவார்கள். எங்கே எந்த கோரிக்கை வைப்பது என்று தெரியாமல் முதல்வர் ரங்கசாமி தள்ளாடுகிறார். முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறார். ஆனால் பாஜக தலைவர் மாநில அந்தஸ்து தேவையில்லை என்கிறார். முரண்பாடான கொள்கையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதுவையில் நடக்கிறது.

புதுச்சேரிக்கு வந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண்  ரிஜிஜு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார். நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் அமைப்பில் மத்திய அரசின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பேசியது, நீதிபதிகள் நியமனத்திற்கு தன்னாட்சி கொண்ட கொலிஜியம் அமைப்பு மூலம் நியமனம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. நீதிமன்றங்களை விமர்சனம் செய்யும் பணியை பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் மூலம் செயல்படுத்துகிறார்.

சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளையும் தங்கள் கையில் வைத்திருப்பது போல  நீதிமன்றங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க பிரதமர் மோடி அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் புதுச்சேரி அரசில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், குறிப்பாக பொதுப்பணித்துறையில் ஒப்பந்தம் எடுத்தால் 13 சதவீதம் கமிஷம் கொடுக்க வேண்டும் என்றும் கொடுக்கவில்லை என்றால் ஒப்பந்தம் மறுக்கப்படுகின்றதாகவும் ஆளும் அரசின் மீது நாராயணசாமி பகிரங்கமாக புகார் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.