ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து டிஜிஏசி உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணியின் இருக்கை அருகே ஒருவர் சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் விமான பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஏர் இந்தியா விமானத்தில் அவர் பயணிக்க 30 நாட்கள் தடை விதித்து அந்நிறுவனம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.
டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுநீர் கழித்த போதை ஆசாமி பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பது தெரியவந்தது. அவருக்கு டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த விமானியின் உரிமத்தை 3 மாதத்திற்கு ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.








