நாங்குநேரி அருகே பள்ளி மாணவ, மாணவியான அண்ணன் தங்கை வீடு புகுந்து வெட்டிய சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி-அம்பிகாபதி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 17 வயதில் சின்னதுரை என்ற மகனும், 14 வயதில் சந்திரா செல்வி என்ற மகளும் உள்ளனர். வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் இருவரும் 12 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். பள்ளியில் சக மாணவர்களுக்கிடையே ஜாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையில் சின்னத்துரை ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தினர், சின்னதுரையின் பெற்றோரை தொடர்புகொண்டு மகனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். பள்ளிக்குச் சென்ற சின்னத்துரையிடம் பள்ளிக்கு வராதது குறித்து ஆசிரியர்கள் விசாரித்தபோது தன்னை சில மாணவர்கள் ஜாதி ரீதியாக கேலி, கிண்டல் செய்வதால் பள்ளிக்கு வர விரும்பவில்லை என சின்னதுரை ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.
இதைகேட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் பள்ளி முடிந்த பின், சின்னதுரையை மடக்கி மிரட்டியுள்ளனர். பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றிருந்ததால் வீட்டிற்கு வந்த சின்னதுரையும், அவரது சகோதரி சந்திரா செல்வியும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. அப்போது வீட்டிற்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத 6 பேர் கும்பல், சின்னதுரையை சரமாரியாக வெட்டியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தங்கை சந்திரா செல்வி அவர்களை தடுக்க முயன்றபோது, அவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இருவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், அந்த கும்பல் தப்பியோடியது. பலத்த ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த சின்னதுரை, சந்திரா செல்வி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிடைந்த தகவலின்பேரில் சம்பவ இடம் வந்த நாங்குநேரி போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அண்ணன், தங்கையிடமும் போலீசார் நடந்தவற்றை கேட்டறிந்தனர். இதற்கிடையே வீடு புகுந்து வெட்டிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மருத்துவமனை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சாலை மறியலின்போது உறவினர்களில் ஒருவரான கிருஷ்ணன் என்பவருக்கு எதிர்பாராத விதமாக வலிப்பு வந்து, வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்து உயிரிழந்ததால் சக உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியை வீடு புகுந்து வெட்டிய விவகாரத்தில், போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி உயிரிழந்த கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரி டிஎஸ்பி ராஜு தலைமையில் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்ததை கிருஷ்ணனின் உடலை அப்புறப்படுத்தி உறவினர்கள் அடக்கம் செய்ததாக தெரிகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் உட்பட 6 சிறுவர்களுக்கு இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அதனடிப்படையில் அவர்களை கைது செய்த போலீசார் 6 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 6 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நெல்லையில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தென் மாவட்டங்களில் மாணவர்களுக்கிடையே ஜாதிரீதியிலான மோதல்கள் தொடரும் நிலையில், சக மாணவனையும், தடுக்க வந்த அவரது தங்கையையும் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா











