மதுரை எய்ம்ஸ் பற்றி மத்திய நிதியமைச்சர் உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உண்மைக்கு மாறான தகவல்களை கூறி மக்களை குழப்புவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எம்.எம்.டி.ஏ காலனியில்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உண்மைக்கு மாறான தகவல்களை கூறி மக்களை குழப்புவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.எம்.டி.ஏ காலனியில் மாடு முட்டியதில் சிறுமி பலத்த காயமடைந்த நிலையில், அவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுமியை நேரில் சென்று சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரின் உடல்நிலை மற்றும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது;

அரும்பாக்கம் எம் எம் டி ஏ பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் ஒன்பது வயது சிறுமி ஆயிஷா சித்திக் பள்ளியிலிருந்து வீடு திரும்பகையில் சாலையில் பசு மாடு முட்டியதில் காயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வந்த குழந்தையினை தற்போது சந்தித்தேன். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறி உள்ளேன். அக்குழந்தைக்கு கை மற்றும் காலில் சிறிய அளவு காயம் இருக்கிறது. சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அக்குழந்தை தற்போது நலமுடன் உள்ளது.

நாடாளுமன்றத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றியா கேள்விக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளீர்கள். நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் போன்று உயர் பதவியில் இருப்பவர்கள் உண்மைக்கு மாறாக செய்திகளை கூறி மக்களை குழப்புவது மிக மிக வருந்தத்தக்க செயல். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கால தாமதமானது காரணம் மாநில
அரசு தான். மருத்துவமனை அமைப்பதற்கு நிலம் தராமல் இருப்பது தமிழக அரசு தான்… என அவர் கூறியிருப்பது மட்டுமின்றி ரூ.1200 கோடியில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம் தற்போது ரூ.1900 கோடியாக உயர்த்தபட்டதற்கு தமிழக அரசு தான் காரணம் என வாய் கூசாமல் சொல்கிறார்.

மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர் ஒரு பிரம்மாண்ட மெகா அண்ட புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு இந்தியாவைப் பொறுத்தவரை 25 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறினார்கள். அவற்றில் முதற்கட்டமாக உத்தரப் பிரதேசம் கோரக்பூர், அசாம், ஜம்மு, அருணாச்சல பிரதேசம், பீகார், காஷ்மீர், தமிழ்நாட்டில் மதுரை ஆகிய ஏழு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

இதில் உத்திரபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனை முழுமையாக இயங்கத் தொடங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட மருத்துவமனை தற்போது வகுப்புகள் துவங்கியுள்ளது. ஜம்முவில் மருத்துவமனை துவங்கப்படாமல், மருத்துவ கல்லூரி வகுப்புகள் மட்டும் துவங்கபட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனை இன்னும் முழுமை பெறவில்லை. காஷ்மீரில் மருத்துவமனை அமைப்பதற்காக பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால் மதுரையை பற்றி நான் கூறி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

மதுரையில் அமைக்கப்படும் மருத்துவமனைக்கு 2019 ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். இன்றைக்கு நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி மத்திய அரசுக்கு அளிக்கவில்லை என்பதால் தான் மருத்துவமனை கட்டுவதற்கு காலம் தாமதமாகி வருவதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார். 2019 ஜனவரி 27ஆம் தேதி நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய அரசுக்கு வழங்கப்படாமல் உள்ள ஒரு இடத்திற்கு பிரதமர் எவ்வாறு வந்து அடிக்கல் நாட்ட முடியும்? நிலத்தை வழங்காத ஒரு இடத்தில் பிரதமரே எப்படி நேரடியாக வந்து அடிக்கல் நாட்டிச் சென்றார். இது என்ன தமிழக மக்களை ஏமாற்றும் செயலா?.

பிரதமர் வந்து அடிக்கல் நாட்டிய இடம், அரசுக்கு சொந்தமான இடம் தான். இந்த இடத்தில் பிரதமரும் கலந்து கொண்டார். அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடியரும் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அந்த இடத்தை ஆய்வு செய்து 15 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்தப் பணி 2021 ஜனவரி நிறைவடைந்தது. அரசு கையகப்படுத்தப்படாத இடத்தில் பிரதமர் அடிக்கல் நாட்டியது எப்படி.? அதே இடத்தில் சுற்றுச்சுவர் கட்டியது எப்படி.? இது எல்லாம் மக்களை குழப்பும் செயல் . எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடங்களை தேர்வு செய்வது மட்டுமே மாநில அரசின் கடமை.

பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மட்டும் மத்திய அரசின் நிதி வழங்கி அங்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் கட்ட உள்ள மருத்துவமனைக்கு மட்டும் கடன் வாங்குவது ஏன்? கடன் வாங்கியாவது கட்டப்படும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம். நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். எய்ம்ஸ் மருத்துவமனை சார்ந்த மாணவர்கள் சேர்க்கையாவது தமிழ்நாட்டின் நடக்க வேண்டும் என்பதற்காகவே விரைவில் பணியை துவங்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 100 மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராமநாதபுரத்தில் பயின்று வருகின்றனர். அதற்கு மாநில அரசு தான் நிதி வழங்கி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.