அருந்தமிழ் கலைகள் அணிவகுத்த ‘நம்ம ஊரு திருவிழா’

பெருநகரின் பேரிருளில் வண்ணமயமாக அமைக்கப்பட்ட அந்த மேடை அதிர அதிர நிகழ்ந்த கலைத்திருவிழாவை நீங்கள் எப்படி தவறவிட்டீர்கள்? முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில், மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழியின் முன்னெடுப்பில்…

பெருநகரின் பேரிருளில் வண்ணமயமாக அமைக்கப்பட்ட அந்த மேடை அதிர அதிர நிகழ்ந்த கலைத்திருவிழாவை நீங்கள் எப்படி தவறவிட்டீர்கள்?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில், மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழியின் முன்னெடுப்பில் கடந்த 2007-ம் ஆண்டு பொங்கல் விழாவையோட்டி சென்னை சங்கமம் எனும் மாபெரும் கலை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

திருவிழா நம்ம தெருவிழா என்ற முன்மொழிவுடன் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தையொட்டி ஒரு வாரம் நடைபெறும் இந்நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுபேற்றபின், சென்னை சங்கமத்தின் மறு உருவாக்கமாக நம்ம ஊரு திருவிழா எனும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் நம்ம ஊரு திருவிழா நடைபெற இயலாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில்தான், அரங்கம் அதிரும் நாட்டுப்புறக் கலைகளின் அணிவகுப்பாக, கடந்த 21-ம் தேதி சென்னை தீவுத்திடலில் ‘நம்ம ஊரு திருவிழா’ கோலாகலமாக நடைபெற்றது.


தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பில், ‘அருந்தமிழ் கலைகளின் அணிவகுப்பு’ எனும் முன்மொழிவுடன் நடைபெற்ற இந்த மாபெரும் கலை நிகழ்ச்சியை, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், மதிவேந்தன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவின் தொடக்கத்திலேயே, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நாட்டுப்புறப்பாடகர் சின்னப்பொண்ணுவின் முருகன் பாடல், நாகூர் சூஃபி கலைஞர்களின் இஸ்லாமிய பாடல் மற்றும் கானா பாலாவின் கிறிஸ்தவ பாடல் அமைந்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது.


அதனைத்தொடர்ந்து, 400-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் ஆர்ப்பரிக்கும் நடனம், இசைக்கருவிகளின் விண்ணைப்பிளக்கும் முழக்கம் என 30-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைகள் அரங்கேற்றப்பட்டன.

மதுரை தட்சிணாமூர்த்தி குழுவினரின் கொம்பு இசை, திருவண்ணாமலை முனுசாமி குழுவினரின் பெரிய மேளம், கோவை சாமிநாதன் குழுவினரின் துடும்பு மேளம், கிருஷ்ணகிரி மஞ்சுநாதன் குழுவினரின் பம்பை மேளம், ராமநாதபுரம் முருகன் குழுவினரின் நையாண்டி மேளம், கன்னியாகுமரி முத்துச்சந்திரன் குழுவினரின் தோல்பாவைக் கூத்து, திருவண்ணாமலை குமார் குழுவினரின் கட்டைக்கூத்து, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சேலம் ஜெயம் நடராஜன் குழுவினரின் சிலம்பாட்டம், காஞ்சிபுரம் கோபால் மற்றும் திங்கள் அரசன் குழுவினரின் புலியாட்டம், கோவை சின்ன நடராஜ், பெரிய நடராஜ் குழுவினரின் காவடியாட்டம், திருவாரூர் சுர்ஜித் குழுவினரின் காவடியாட்டம், மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் மரக்காலாட்டம், முத்து முனியாண்டி குழுவினரின் தீ சாகசம் போன்ற சாகச கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தொடர்ந்து, திருவண்ணாமலை ராஜன் குழுவினரின் அம்மன் நடனம், சென்னை கார்த்திக் குழுவினரின் கரகாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பன்னீர் ராஜன் மற்றும் தஞ்சை அமலா குழுவினரின் பொய்க்கால் குதிரையாட்டம், கரகம், மயில், காளையாட்டம், நெல்லை மணிகண்டன் குழுவினரின் தேவராட்டம், தர்மபுரி சாக்கன் குழுவினரின் சாட்டைக்குச்சி, பொள்ளாச்சி மகேந்திரன் குழுவினரின் ஜிக்காட்டம், கரூர் சின்னதுரை குழுவினரின் சேர்வையாட்டம் என அடுத்தடுத்து சங்கமித்த கலைக்கதம்பத்தின் உச்சக்கட்டமாக, அலங்காநல்லூர் வேலு குழுவினரின் விண்ணதிர ஒலித்த பறையிசையில் பார்வையாளர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். நம்ம ஊரு திருவிழாவின் நடன நிகழ்ச்சிகளை பிரபல நடன இயக்குநர் பிருந்தா வடிவமைத்திருந்தார்.


இவற்றை தொடர்ந்து, மக்கள் இசைப் பாடல்களாக, வேல்முருகனின் தெம்மாங்கு பாட்டு, திருவண்ணாமலை ஜெயக்குமார் குழுவினரின் ஒப்பாரிப் பாட்டு, தஞ்சாவூர் சின்னப் பொண்ணு மற்றும் அந்தோணிதாசன் ஆகியோரின் கிராமியப் பாடல்களுடன் கானா பாலா வழங்கிய கானா பாட்டுகள் தமிழர் வாழ்வியல் கலைகளின் சங்கமமாக நம்ம ஊரு திருவிழாவில் அணிவகுத்தன.

கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட ‘நம்ம ஊரு திருவிழா’ நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார் கட்டைக்கூத்துக் கலைஞர் குமார்.


நீலகிரியில் வாழும் தோடர் இன மக்களின் தொன்மையான நடனம் மற்றும் மென்மையான பாடலுடன் இனிதே நிறைவுற்ற நம்ம ஊரு திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் உற்சாகமான கண்டு ரசித்தனர்.

தமிழர்களின் நாட்டுபுறக் கலைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் ‘நம்ம ஊரு திருவிழா’வை போல் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்; கலைகளுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள கலைஞர்கள் போற்றப்பட வேண்டும் என்பதே அனைத்து நாட்டுப்புற கலைஞர்களின் விருப்பமாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.