ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளி பரமசிவம் என்பவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்(65). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் வழக்கம்போல் இரவு பரமசிவம் பணிக்கு வந்துள்ளார்.

இதனிடையே இன்று அதிகாலை பேரூராட்சி அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்தும் செட்டில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பரமசிவம் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்துள்ளார். பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி பரமசிவத்தின் உறவினர்கள் ராசிபுரம் – ஆத்தூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.







