முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இயற்கை நீதிக்கு எதிரானதாக உள்ளது: திருமாவளவன்

நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சட்டப்பிரிவை நீக்க வேண்டுமென தமிழக அரசை தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்னும் அதிகாரம், நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்கிற அச்சுறுத்தலை உருவாக்குவதாக உள்ளது. நீதியையும் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிற போது விமர்சனங்களிலிருந்து நீதிமன்றங்கள் அப்பாற்பட்டவையா? நீதிபதிகளும் அப்பாற்பட்டவர்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சந்தேகங்களுக்கு இடமளிக்காதவர்களே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கமுடியும். நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் இது பொருந்தும் தானே. ஆனால், கருத்துச் சொன்னாலே நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் சட்டம் பாயுமென நீதிபதிகள் வரிந்து கட்டுகின்றனர்.

அந்தவகையில் தான் சமூக ஊடகச் செயற்பாட்டாளர் சவுக்கு சங்கர் தண்டிக்கப்பட்டுள்ளார். அக்குற்றத்துக்கு அதிக அளவு தண்டனை என்னவோ (ஆறு மாதங்கள்) அதனையே அளித்துள்ளனர். இது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சட்டப்பிரிவை நீக்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதற்காக கடந்த ஆண்டு விசிக சார்பில் மக்களவையில் தனிநபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்துள்ளோம் என்பதைத் தமிழக அரசின் கவனத்துக்குச் சுட்டிக்காட்டுகிறோம்.

நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனை இயற்கை நீதிக்கு (Natural justice) எதிரானதாக உள்ளது. எனவே, இதனை நீதிமன்றமே ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும்.

பொதுவாக ஒரு வழக்கில் வாதி – பிரதிவாதி என இரண்டு தரப்பு இருக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பளிக்கும் இடத்தில் நீதிபதி இருப்பார். ஆனால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவரெனக் கூறப்படும் நீதிபதியே தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருக்கிறார். எனவேதான் இது இயற்கை நீதிக்கு முரணானதாக உள்ளது.வளர்ந்த நாடுகள் பெரும்பாலானவற்றில் நீதிமன்ற அவமதிப்பு என்னும் பிரிவே சட்டத்தில் இல்லை.

பொதுவாக நீதிபதிகள் ஒரு வழக்கில் தாம் மறைமுகமாகத் தொடர்பு கொண்டிருந்தால் கூட அந்த வழக்கை விசாரிக்காமல் விலகிக் கொள்வது வழக்கம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவராகக் கூறப்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களே வழக்கை விசாரித்து தண்டனையும் அளித்திருக்கிறார். இது சட்டப்படி முறையானதல்ல என்று பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

1971 ஆம் வருடத்திய நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் அதிகபட்ச தண்டனையே ஆறு மாதம் சிறைதான். இந்த வழக்கில் அந்த அதிகபட்ச தண்டனையை நீதிபதிகள் வழங்கி உள்ளனர். இது நீதி வழங்குவது என இல்லாமல் பழிவாங்குவதாக உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்பு கேட்கவில்லை என்ற காரணத்தை கூறித்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் பழிவாங்கும் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடாது, கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டு இந்த தண்டனையை ரத்து செய்ய மாண்புமிகு நீதிபதிகள் முன்வரவேண்டும் என விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என தனது அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.

– பரசுராமன்.ப
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: சென்னை காவல் ஆணையரிடம் மனு!

EZHILARASAN D

சென்னை கன மழை; போரூர் பகுதி மக்கள் கோரிக்கை

Halley Karthik

காவிரி – கோதாவரி திட்டம் குறித்து பிரதமரிடம் பேசினேன் – ஈ.பி.எஸ்

EZHILARASAN D