நாமக்கல்லில் நெகிழ்ச்சி சம்பவம்! உயிரோடு இருக்கும் தாயாருக்கு கோயில் கட்டி சிலை வைத்த அன்புமகன்!

நாமக்கல் அருகே உயிரோடு இருக்கும் தாயாருக்கு, மகன் கோயில் கட்டி சிலை வைத்து, அதனை தனது தாயின் கையாலையே திறந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்லை அடுத்த ரெட்டிப்பட்டி சக்தி நகர்…

நாமக்கல் அருகே உயிரோடு இருக்கும் தாயாருக்கு, மகன் கோயில் கட்டி சிலை வைத்து, அதனை தனது தாயின் கையாலையே திறந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்லை அடுத்த ரெட்டிப்பட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (30) வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவரது தாயார் மணி (50). உயிருடன் உள்ள தனது தாயாருக்கு சிலை வடித்து கோயில் கட்ட வேண்டும் என்பது பிரபு வுக்கு சிறுவயது முதலே ஆசை. பாலூட்டி சீராட்டி வளர்த்த தனது தாயாருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் தனது வீட்டிற்கு அருகே 1,200 சதுர அடி நிலம் வாங்கி, கோயில் கட்டி அதில் 3 அடி உயரத்தில் சிலை வைத்துள்ளார். ரூ.1.50 லட்சம் மதிப்பில் இத்தாலியன் மார்பிள்ஸ் கல் மூலம் வெள்ளை நிறத்தில் உள்ள இந்த சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை அப்பகுதியை சேர்ந்த பலர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். பொதுவாக இறந்தவர்களுக்கு தான் சிலை வடிப்பார்கள். ஆனால் உயிருள்ள ஒருவருக்கு சிலை வைத்து கோயில் கட்டியுள்ளது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிரபு கூறுகையில், தந்தை வாசு, 2003 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் இறக்கும் போது எனக்கு 10 வயது. என் தங்கை ஜீவாவுக்கு 9 வயது. தந்தை இறந்தவுடன் தாய் மணி, எங்களை வளர்த்து ஆளாக்க கடுமையாக போராடினார். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள நான், ‘வெல்டிங்’ தொழிலை கற்று தேர்ந்து, கூலிப்பட்டியிலேயே சொந்தமாக பட்டறை வைத்தேன். தொழில் நல்ல முறையில் நடந்ததால், தங்கைக்கு திருமணம் செய்து வைத்தேன். என் திருமணமும் முடிந்து ஒரு குழந்தை உள்ளது.

மிகவும் சிரமப்பட்டு எங்களை வளர்த்த அம்மாவை தற்போது மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறேன். ஆனாலும், அவரை என்றும் நினைவில் வைத்திருக்க, கூலிப்பட்டி-சிவியாம்பாளையம் சாலை சக்தி நகரில், 1,500 சதுர அடியில் கோவில் கட்டினேன். அதற்காக ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, 3 அடி உயரம், 80 கிலோ எடையில், தாயின் முழு உருவச்சிலையை தயாரித்து கொண்டு வந்தேன். இறந்த பின்னர் பிண்டம் வைத்து திதி கொடுப்பதை விட உயிருடன் இருக்கும் தனது தாயாருக்கு சிலை வைத்து அவரை கவுரவ படுத்த வேண்டும் என்பது தனது நீண்டநாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்று தெரிவித்தார்.

மகனின் இந்த செயல் குறித்து அவரது தாயார் மணி பேசுகையில், கஷ்டப்பட்டு வீட்டு வேலை செய்து தனது மகனை ஆளாக்கியுள்ளேன். உயிருடன் இருக்கும் எனக்கு சிலை வைத்துள்ளது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.