நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மோளப்பாளையம் பேருந்து நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கம்பி வேலியில் சிக்கி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த வன சரக ரேஞ்சர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
கொல்லிமலை வனப்பகுதியில் வன ரேஞ்சராக பணியாற்றி வந்தவர் ரகுநாதன். இவருடன் மார்த்தாண்டத்தை சேர்ந்த மர வியாபாரி ராஜன் மற்றும் இடைத்தரகர் செல்வகுமார் ஆகிய மூவரும் சேர்ந்து காரில் மர வெட்டும் கருவி வாங்குவதற்காக சேலம் சென்று கொண்டிருந்தனர்.
பேளுக்குறிச்சியை அடுத்த மோளப்பாளையம் பேருந்து நிலையத்தின் அருகே சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த கம்பி வேலியில் சிக்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த வன ரேஞ்சர் உள்ளிட்ட மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொல்லிமலை வனப்பகுதியில் ஏற்கனவே மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த சம்பவம் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. மேலும் காரில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
வேந்தன்







