நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தம்முடைய உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கும்படி கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உள்துறைச் செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நளினியின் தாயார் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினியின் பரோல் மனு அரசின் பரிசீலனையில் இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தெரிவித்தார். இதனையடுத்து வரும் வியாழக்கிழமை அரசின் முடிவை தெரிவிக்கும்படி உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.








