சென்னை பல்கலைக்கழகத்தின் விதிமீறல் சேர்க்கை முறைக்குக் கண்டனம் – நயினார் நாகேந்திரன்!

இளநிலை தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டு, அதன்பின் முறையான சேர்க்கையை நடத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை தேர்வு முடிவுகள் வரும் முன்பே முதுநிலை சேர்க்கையை முடித்து வகுப்புகளைத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பழம்பெருமைமிக்க இப்பல்கலைக்கழகம், விதிகளைப் புறந்தள்ளிச் செயல்படுவது கண்டனத்திற்குரியது.

தேர்வு முடிவுகள் வராத நிலையில் மாணவர்களிடம் கட்டணம் பெற்று வகுப்புகளைத் தொடங்குவது அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் செயலாகும். ஒருவேளை தேர்வில் தோல்வியுற்றால் மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற அறிவிப்பு பொறுப்பற்றது. இதனால் மாணவர்களின் கல்விக்கட்டணமும், ஓராண்டு கால உழைப்பும், அவர்களின் எதிர்காலமும் வீணாகும் அபாயத்தை இந்த அரசு உணராதது ஏன்?

முதலமைச்சர் ஜோசேப் விஜய் அரசின் கண்காணிப்புக் குறைபாடே பல்கலைக்கழகங்களின் இத்தகைய தன்னிச்சையான விதிமீறல்களுக்குக் காரணமாகும். எனவே, பல்கலைக்கழக நிர்வாகமும் உயர்கல்வித்துறையும் உடனடியாக இதில் தலையிட்டு இந்தத் தவறான நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். இளநிலை தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டு, அதன்பின் முறையான சேர்க்கையை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.