நாகபட்டினம் அருகே உள்ள நாயக்கன் தெருவில் ஒரு சிலர் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடியபோது பட்டாசு ஒன்று குடிசை மீது விழுந்ததில் 20 க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாயின.
நாகப்பட்டினம் காட்டு நாயக்கன் தெருவில் ஒரு சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி கொண்டு இருந்தனர். அப்போது பட்டாசு ஒன்று குடிசை வீடு ஒன்றின் மீது விழுந்ததில் குடிசையின் கூரையில் மளமளவெனத் தீப் பிடித்தது. பின்னர் அருகிலிருந்த வீடுகளில் அடுத்தடுத்து தீ பரவத் தொடங்கியது. இதனால் குடிசை வீடுகளிலிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறினர். பகல் நேரத்தில் இந்த தீ விபத்து நடந்த காரணத்தால் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ கட்டுக்குள் வந்தது. எனினும் 20க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீக்கிரையாயின. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.








