கோவை அருகே தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை-திருச்சி சாலையில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் வழிபடும் தேவாலயம் ஒன்று உள்ளது. ஊரடங்கு நாளான நேற்று பொதுமக்கள் நடமாட்டமின்றி காணப்பட்ட இந்த தேவாலயத்தில் இரவு 10 மணி அளவில் தேவாலய வளாகத்தில் உள்ள கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது.
சத்தம் கேட்டு பாதுகாவலர் ஜான்சன், சென்று பார்த்த போது, தலைகவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர், தேவாலயத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த புனித செபாஸ்டியரின் சிலையை உடைத்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைத்து கூச்சலிட்டுள்ளார். பாதுகாவலரின் சத்தம் கேட்டு மர்ம நபர், இருசக்கர வாகனத்தில் இருந்த மற்றொரு நபருடன் தப்பிச் சென்றார்.
இதில் செபாஸ்டியர் சிலை மற்றும் அதனைச்சுற்றி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. புகாரையடுத்து, வழக்கு பதிந்த ராமநாதபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அண்மையில், வெள்ளளூர் பகுதியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேவாலயத்தில் உள்ள சிலை உடைக்கப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.







