ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் உள்ள முருகன் கோயிலில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையிலேயே பிரசித்தி பெற்ற முருகன் மற்றும் பெருமாள் கோவில் உள்ளது. முருகன் கோயிலில் மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கோயிலில் உள்ள 4 உண்டியல்களின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய், சிசிடிவி கேமரா மற்றும் 2 ஹார்டு டிஸ்க்குகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த முருகன் கோவிலில் பல முறை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை ஒருவரைக்கூட போலீசார் கைது செய்யவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் அறிந்து வந்த குரிசிலாப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களின் கைரேகையை சேமித்து வருகின்றனர்.
ஆனால், இதுகுறித்து இந்து அறநிலையத் துறையினர் திருட்டுச் சம்பவம் எதுவுமே நடக்காததுபோல் மெத்தனப் போக்கில் செயல்படுகின்றனர் எனவும் திருட்டு சம்பவம் குறித்து எந்தத் தகவலையும் கூறாமல் மறைக்கின்றனர் எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.







