பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

வாணியம்பாடியில் பூட்டிய வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோக்களை உடைத்து 95 சவரன் நகை மற்றும் இரண்டு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி…

வாணியம்பாடியில் பூட்டிய வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோக்களை உடைத்து 95 சவரன் நகை மற்றும் இரண்டு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர், பகுதியைச் சேர்ந்த அதாவுர் ரஹ்மான், சென்னையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நூரேசபா குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில், அவரது தாய் ஷர்புன்நிசாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை பார்த்துகொள்வதற்காக, குழந்தைகளுடன் தாய் வசித்து வரும் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையறிந்த மர்ம நபர்கள், மொட்டை மாடியில் காற்று வசதிக்காக அமைக்கப்பட்டு இருந்த கிரீல் கம்பிகளை வளைத்து உள்ளே புகுந்துள்ளனர். தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவினை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த 95 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து நூரேசபா அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி நிகழ்விடத்திற்கு விரைந்து நேரில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து போலீசார் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து, தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 40 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.