பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமைதலைமை அலுவலகமான கமலாலயத்தில், மர்மநபர்கள் சிலர் 3 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டு வீச்சால், அங்கு எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மேலும், அருகில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு மர்மநபர்களை அடையாளம் காணும் பணியை செய்து வருகின்றனர்.
கமலாலயம் மற்றும் அது அமைந்துள்ள தெருவின் முனைகளில், எப்போதும் பாதுகாப்பு பணியில் போலீசார் இருப்பது வழக்கம். எனினும், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதல் தற்போது நடந்துள்ளது. இதுகுறித்து, கேள்வி எழுப்பியுள்ள, பாஜக தகவல் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் நிர்மல் குமார், “தலைநகரிலேயே பெட்ரோல் குண்டு கலாச்சாரம், நீங்கள் சட்டம் ஒழுங்கை காக்கும் லட்சணம் இதுதானா?” என அவர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதேபோல, சென்னை மாநகர 75-வது வட்டத்தில் பாஜகவின் தேர்தல் பணிமனை மீது தாக்குதல், நடந்துள்ளது, அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகள் கிழிக்கப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








